Saturday, September 11, 2010

காசி தியேட்டர் (பி.எ.பி)

பாஸ் என்கிற பாஸ்கரன் – காசி தியேட்டரில் பார்க்கச் சென்றோம். கடைசி பத்து நிமிடங்களுக்கு நட்ட நடு திரையில் ஒரு பாப்-அப் விண்டோ தோன்றி நயனின் அழகை ரசிப்பதில் தொந்தரவு கொடுத்தது.

திரைப்படம் மும்பையில் இருந்து சாட்டிலைட் மூலமாக ஒலி-ஒளிபரப்பப்படுகிறதாம். அதில் ஏதோ கோளாறாம். அதை சரி செய்ய முயற்சித்ததால் திரைப்படத்தை மீண்டும் ஆரம்பத்தில் இருந்தோ, இடையில் இருந்தோ தான் ஒலி-ஒளிபரப்பமுடியுமாம்.

டிக்கெட்டுக்கு வாங்கிய எண்பது ரூபாயில் ஒரு அஞ்சு ரூபாயை திருப்பித் தருவார்களா? அந்த தியேட்டர் அஃபிஷியலிடம் இதை நான் கேட்கவில்லை.

Wednesday, September 8, 2010

கதிரவனே…கதிரவனே...

சூர்ய அஸ்தமனம். வானம் தன் மேக பரிவாரங்களுடன் கூடியிருந்தது. வெண்ணிறத்தில் சில மேகத்துண்டுகள், வெள்ளியாய் சில விளிம்புகள், விண்ணுடன் போட்டி போட்டுக்கொண்டு வெளிர் நீல நிறத்தில் சில மேகத்துணுக்குகள், கருநிற மழை மேகங்கள் என அவற்றில் தான் எத்தனை விதம்? அப்பப்பா…

இயற்கையோடு கரையும் சூட்சுமம் தெரிந்திருந்தால்...இதோ இதனை எழுத நான் இல்லை. கணவருக்கு மனௌஇவி இல்லை. குழந்தைக்கு தாய் இல்லை.(’நான்’ இல்லாமல் போனால் மற்றோருக்கு பெரிதாக ஏதும் பிரச்சனை இருக்கப் போவதில்லை!)

மஞ்சளாய் ஜொலித்த சூரியன் பாரபட்சமின்றி எல்லா மேகங்களுக்கும் மஞ்சள் நீரட்டியிருந்தான். ‘அம்மா, அம்மா’வென்று ஏதேதோ பேசிக்கொண்டிருந்த மகனின் குரலும் தலையைச் சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்த காக்கைகளின் கரைதலுமே அவ்வப்பொழுது என்னை நினைவுலகில் நிலைக்கச் செய்தது.

மஞ்சள் மாறி அடர் மஞ்சள் நிறமாய் மாறினான் கதிரவன். இப்பொழுது அவனது எல்லை தெளிவாகத் தெரிந்தது. அதே நிற கதிர்களை பீய்ச்சி அடித்துக்கொண்டிருந்தான். கதிரவனுக்கு மிக அருகில் தோன்றிய மேகத் துண்டுகள் எல்லாம் தங்கத் தகடுகளாய் ஜொலித்தன.

இயற்கையின் கூண்டுக்குள் மாட்டிக்கொள்ளவே விருப்பம். விட மனம் வரவில்லை. கீழிறங்கத் தோன்றவில்லை. ஆனாலும் செய்தேன்...மகனுக்காக...கணவருக்காக...எனக்காகவும்!